யுத்தம் ஆரம்பம் - இது பதிவர்கள் பலர் ஒன்றிணைந்து எழுதும் மெகா தொடர் கதையாகும். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பதிவர்கள் எழுதும் இந்த கதை முற்றிலும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இதனை மல்டி ஸ்டார்ஸ் நடிக்கும் திரைப்படக் கதையாக மட்டும் பார்க்கவும். இனி கதைக்கு செல்வோம்.....
பகுதி 1 -
ரஜினி முதல்வரானால் - யுத்தம் ஆரம்பம் - ஹாரி பாட்டர்
பகுதி 2 -
துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - சீனு
மூன்றாம் யுத்தம் தொடர்கிறது...
#################################################################################
சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் குழுமியிருக்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று வந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்க காரிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது.
காக்கிச்சட்டையினுள் அடங்க முடியாமல் உடல் திமிறிக் கொண்டிருக்க சிங்கம் போல நடந்து வந்தார் இன்ஸ்பெக்டர் சூர்யா. நடந்து வரும் போதே தன் கையில் இருந்த கருப்பு நிறக் கண்ணாடியை கண்களில் பொருத்த, பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்தனர்.
"சார்! நீங்க தான் இந்த கேஸை விசாரிக்கப் போறதா கேள்விப்பட்டோம். குற்றவாளிகளை சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவீன்களா?"
"இதுல எதிர்கட்சியோட சதி இருக்குமா?"
"சொந்தக் கட்சியிலேயே சில பேர் இதுல சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சொல்றாங்களே? அது உண்மையா சார்?"
"பலத்த போலிஸ் பாதுகாப்பையும் மீறி இது நடந்திருக்கிறது என்றால், காவல்துறையில உள்ளவங்களுக்கும் இதுல பங்கு இருக்கா சார்?"
நிருபர்கள் ஒவ்வொருவரும் சரமாரியாக கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்க, கடைசிக் கேள்வியால் சூர்யா டென்ஷன் ஆனார்.
"நான் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை. விசாரணைக்கு பின்னால் தான் உண்மை என்னவென்று தெரியும். அதுவரைக்கும் உங்க யூகத்துக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. சாரி!" சொல்லிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளே சென்றார்.
அறையில் டி.ஜி.பி ராஜேந்திரன் அமர்ந்திருக்க அவருக்கு சூர்யா சல்யூட் அடித்தார்.
"வாங்க மிஸ்டர் சூர்யா! உங்களுக்காகத் தான் காத்திட்டு இருக்கேன். உட்காருங்க!"
"தேங்க்யூ சார்!" என்று சொல்லி சூர்யா அமர்ந்தார்.
"முதல்வரோட நன்றி அறிவிப்பு மாநாட்டுல நடந்தை கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்"
"ஆமா சார்! எனக்கே அதிர்ச்சியா இருந்தது"
"உங்களால தான் இந்த கேஸை சீக்கிரம் முடிக்க முடியும்னு எனக்கு தோணுச்சு. அதனால தான் நான் உங்களை கூப்பிட்டேன். இந்த ஃபைலில் நிகழ்ச்சி நடந்தப்ப எடுத்த போட்டோ, வீடியோக்கள், ஃபாரன்சிக் ரிப்போர்ட் எல்லாம் இருக்கு. இதுல ஏதாவது துப்பு கிடைக்குமான்னு பாருங்க"
"ஓகே சார்!"
"சூர்யா! உங்க திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் சொல்றேன். இது ஒரு சென்சேசனல் கேஸ். சீக்கிரம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பாருங்க"
"புரியுது சார்! ஐ வில் டு மை பெஸ்ட்"
"அப்புறம் உங்களுக்கு கணேஷ்-வசந்தை தெரியும் தானே?"
"கணேஷ் வசந்த் அந்த லாயர் கம் டிடெக்டிவ்ஸ் தானே சார்?"
"ஆமா அவங்க தான். முதல்வர் தனிப்பட்ட முறையில அவங்களை விசாரிக்க சொல்லியிருக்கார். தேவைப்பட்டால் அவங்களோட கோ-ஆப்பரேட் பண்ணுங்க"
"முதல்வர் ஏன் சார் அவங்களை கூப்பிடனும்?"
"ஒரு வேளை நம்ம டிபார்ட்மென்ட் மேல நம்பிக்கை இல்லாமல் கூட இருக்கலாம்."
"சரி சார்! இப்பவே நான் என் விசாரணையை தொடங்குறேன். அப்ப நான் கெளம்புறேன் சார்!"
"ஆல் தி பெஸ்ட் சூர்யா!"
"தேங்க்யூ சார்!" சொல்லிக் கொண்டு சூர்யா டி.ஜி.பியிடமிருந்து விடைப்பெற்றார்.
##################################################################################
சென்னை விமான நிலையம் எப்போதும் போல பரப்பரப்புடன் காட்சி அளித்தது.
"கோடி கோடியா கொள்ளையடிக்கிறவங்களை விட்டுடுறாங்க. வெளிநாட்டுல வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்து நகை வாங்கிட்டு வரும் நம்மகிட்ட காசு புடுங்குறாங்க. எல்லாம் நம்ம தலையெழுத்து!" சுங்கத் துறையை திட்டிக் கொண்டே பயணிகள் செல்ல,
Arrival பகுதியில் அஜித்தும், விஜயும் காத்திருந்தனர். அவர்கள் முகத்தில் முன்பிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.
சிறிது நேரத்தில் ட்ராலியை தள்ளிக் கொண்டு கமல் வந்தார். உடனே இருவரும் சென்று வரவேற்றனர். இருவரையும் கட்டியணைத்தார் கமல்.
"எப்படிப்பா இருக்கீங்க?"
"எப்படி அங்கிள் இருக்கீங்க?" அஜித்தும், விஜயும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
"நான் நல்லா இருக்கேன்மா! அப்பா எப்படி இருக்கார் விஜய்?"
"இப்ப தேவலாம் அங்கிள். கையில தான் லேசான அடி. வீட்டில் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கார்"
அஜித் ட்ராலியை தள்ளிச் செல்ல மூவரும் காரில் ஏறினர்.
"நான் அப்பவே ரஜினிகிட்ட சொன்னேன். அரசியல் வேண்டாம், உனக்கு சரிப்பட்டு வராதுன்னு. ஆனா அவன் கேட்கலை. இப்ப பாருங்க, பதவி ஏற்று ஒரு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு" கமல் சொன்னார்.
"இல்லை அங்கிள்! இதுல அரசியல் காரணமா இருக்காதுன்னு நினைக்கிறேன். வேற ஏதோ நடந்துட்டு இருக்கு. விபரீதமா ஏதோ நடக்க போகுதுன்னு எனக்கு தோணுது"
"எதை வைத்து சொல்ற விஜய்?"
"ஆமாம்பா! எனக்கும் அதான் தோணுது. எங்களுக்கு வந்த எஸ்.எம்.எசை பாருங்க" என்று சொல்லிக் கொண்டே அஜித் தன்னிடமிருந்த மொபைலை கமலிடம் காட்ட, கமலின் முகம் மாறியது.
##################################################################################
இரவு பத்து மணி. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் சூர்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
"என்னங்க! இன்னொரு தோசை ஊத்தவா?"
"எனக்கு போதும்மா! நீ சாப்பிடு!" சூர்யா பதில்சொல்லும்போதே மேஜையில் இருந்த அவரின் மொபைல் ஒலித்தது.
"ஹலோ! யார் பேசுறது?"
"........................"
"ஆமா! சூர்யா தான் பேசுறேன்"
"........................"
"ம்ம்ம்ம்"
"........................."
"எந்த இடத்துல நடந்தது?"
"........................."
"சரி! இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே வர்றேன்" போனை கட் செய்து, மனைவியிடம் சொல்லிவிட்டு அவசரமாக காரில் கிளம்பினார்.
பெசன்ட் நகர் பீச் அருகே ஒரு வீடு மட்டும் தனியாய் தெரிந்தது. வீட்டின் வடிவமைப்பும், அலங்கார விளக்குகளும் வெளிநாட்டு தரத்தில் இருந்தது.
காவல்துறையினர் சூழ்ந்திருக்க, சூர்யாவின் கார் வந்து நின்றது.
"வாங்க சார்!" சப் இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன் வரவேற்க இருவரும் உள்ளே சென்றனர்.
அங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்க அதனை ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.
"உங்களை கூப்பிட்டதற்கு இது தான் சார் காரணம்" என்று சுவற்றை காட்டினார் லிவிங்ஸ்டன். அங்கே ரத்தத்தால் ஆங்கில வாசகம் எழுதப்பட்டிருந்தது.
|
WAR BEGINS |
##################################################################################
யுத்தம் தொடரும் இடம் -
சின்னமலை - தல போல வருமா
அதனை தொடர்ந்து யுத்தம் செய்யவிருப்பவர்கள்:
பகுதி 5 - SCENECREATOR -யாவரும் நலம்
பகுதி 6 - ஹாலிவுட் ரசிகன்- ஹாலிவூட் பக்கம்
பகுதி 7 - KUMARAN - எண்ணங்களும் வண்ணங்களும்
பகுதி 8- ராஜா - என் ராஜ பாட்டை
பகுதி 9 - JZ - JZ சினிமா
பகுதி 10 - ராஜ் -சினிமா சினிமா
பகுதி 11 - கணேஷ் - மின்னல் வரிகள்
பகுதி 12 - ஸ்ரீராம் - எங்கள் பிளாக்
பகுதி 13 - அருண் - அவிழ்மடல்
பகுதி 14 - மதுமதி - தூரிகையின் தூறல்
பகுதி 15 - சென்னை பித்தன் - நான் பேச நினைப்பதெல்லாம்
பகுதி 16 - வெங்கட் சீனிவாசன் - கையளவு மண்
பகுதி 17 - பாரதி - சிகரம்
பகுதி 18 - நீங்களாகவும் இருக்கலாம். அது பற்றி அறிய
இங்கே கிளிக் செய்யுங்கள்.