பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் அதிகமானவர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது நம் வீடுகளில், நாம் செல்லும் இடங்களில் என்று எங்கேயாவது எதையாவது பார்த்தால் உடனே தனது மொபைலை எடுத்து போட்டோ பிடித்து பேஸ்புக்கில் பகிர்வது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல! ஆனால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதை அறிவீர்களா?
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது பெண் தனது பாட்டி வீட்டில் தங்கி வருகிறார். கடந்த 24-ஆம் தேதி அவர் பாட்டியின் சேமிப்பு பணத்தை எண்ணுவதற்கு உதவி செய்துள்ளார். நிறைய பணத்தை பார்த்ததும் அந்த பெண் உடனே அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
நிற்க...! (அல்லது உட்கார்ந்துக் கொண்டே படிக்க...!)
பேஸ்புக் என்பது பாதுகாப்பானது அல்லது தனிப்பட்டது (Private) என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு பேஸ்புக் பற்றி தெரியவில்லை என்று அர்த்தம். உங்களை உங்கள் நண்பர்கள் மட்டுமல்ல, பேஸ்புக்கை பயன்படுத்தும் கோடிக்கணக்கான கண்கள் கண்காணிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (நாம் என்ன அவ்வளவு பிரபலமா? என கேட்காதீர்கள். ஒரு உவமைக்காக சொன்னேன்)
சம்பவம் தொடர்கிறது....
பேஸ்புக்கில் அந்த பெண் அதிகமான பணத்தின் புகைப்படத்தைப் போட்டதும் அதனை பார்த்தவர்களில் இரு திருடர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு முகமூடி அணிந்துக் கொண்டு சென்றுள்ளனர் (ஆனால் பணம் இருப்பது பாட்டி வீட்டில்). அங்கிருந்த பெண்ணின் தாயாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர் . அந்த பெண் இங்கு தங்குவதில்லை என்று சொல்லியுள்ளார். வீடு முழுதும் தேடிப் பார்த்தபின் அந்த வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தையும், சில பொருட்களையும் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். பிறகு இது பற்றி போலீசில் புகார் செய்துள்ளார் அந்த பெண்ணின் தாயார்.
சம்பவம் முடிந்தது....
பாதுகாப்பு வழிகள்:
- உங்கள் புகைப்படத்தை பகிர்வதை தவிர்க்க முயற்சியுங்கள்.
- உங்கள் வீட்டு முகவரி, மொபைல் எண் போன்றவற்றை பகிராதீர்கள்.
- உங்கள் இருப்பிடத்தைப் புகைப்படம் எடுத்து பகிராதீர்கள்.
- உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக சேர்ப்பதை தவிருங்கள்.
இந்தசம்பவம் குறித்து ஆஸ்திரேலியா போலீசின் அறிக்கை: http://goo.gl/ZR2Ql
Tweet | |||